Share it

Tuesday 11 October 2016

வலைப்பதிவர் கவீதா காலமானார்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். பாடசாலைக் காலத்தின் பின் இலங்கையின் பத்திரிகைகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது கவிதை ஆர்வத்தைக் கண்ட நான் அவரது கவிதைகளை உலகறியச் செய்ய எண்ணி 'கவீதாவின் பக்கங்கள்' என்னும் வலைப்பதிவை உருவாக்கி அவரது கவிதைகளை பிரசுரித்து வந்தேன். அவரிடம் கணினி வசதியில்லாததன் காரணமாக நானே தொடர்ந்து அந்த வலைப்பதிவை நடத்தி வந்தேன். என்றாலும் என்னால் இவ்வலைப்பதிவை சரிவர தொடர்ந்து நடத்திட இயலவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக அவருடன் உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை.

இன்று (2016.10.11) பள்ளித் தோழி ஒருவரிடம் நீண்ட நாட்களின் பின் உரையாடிக் கொண்டிருந்த போது 2016.07.05 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக , அதாவது 2016.06.15 ஆம் திகதியே அவருக்குத் திருமணம் இடம்பெற்றுள்ளது. அவசர கதியில் உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கடந்த வருடம் அவர் கவிதை நூல் ஒன்றை வெளியிடும் நோக்கத்துடன் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பணமும் சேர்த்து வருவதாகவும் என்னிடம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தக் குறிஞ்சிப் பூ இன்று நம் மத்தியில் இல்லை. என்றாலும் என்னால் இயலுமானால் அவரது கவிதைகளை அவரது பெற்றோரிடம் கேட்டுப் பார்த்து குறைந்தபட்சம் வலைத்தளத்திலேனும் வெளியிட முயற்சி செய்கிறேன். 



அவரது தற்கொலை மரணம் தொடர்பில் இலங்கையின் செய்தி இணையத்தளமான 'கருடன் நியூஸ்' பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

# திருமணம் நடந்து 21 நாட்களில் இளம் பெண் தற்கொலை. ராகலையில் சம்பவம்!

திருமணம் முடித்து 21 நாட்களே ஆன நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவமொன்று ராகலை கோனபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ராகலை கோனபிட்டியை சேர்ந்த செல்வராஜ் பிரியதர்ஷினி என்ற 28 வயதான இளம் பெண்ணொருவரே இவ்வாறு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது கணவன் வேலையில் இருந்து வீடு திரும்பியபோது அவரது புது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். #

நமது காவல்துறை விசாரணையில் இதுவரை எதையும் சாதித்து விடவில்லை. இனியும் சாதிக்கப் போவதில்லை. அவரது மரணத்தில் ஏதேனும் மர்மங்கள் இருந்தால் அதனை காலம் நிச்சயம் வெளிக்கொண்டுவரும். ஆனாலும் காலத்தால் நமது தோழி கவிஞர் கவீதாவை திருப்பிக் கொடுக்க முடியாது என்பதை நினைக்கும் போது இதயம் கனக்கிறது. 

தோழியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்!

No comments:

Post a Comment

Share it

Ads

Popular Posts