Share it

Sunday, 24 February 2019

எண்ணத்தில் ஒரு துளி

உன்னை என மனதுள்
எண்ணிக்கொள்ளும்
போதெல்லாம்
ஓர் ஆனந்தம்
உன் நினைவுகளை
மனதில் சுமக்கும் போதெல்லாம்
பேரானந்தம்
இங்குதான்
தனிமையிலே
சுதந்திரப் பறவையென
நரகத்தில் வாழ்வது விடவும்
நிலம் கடந்து - உன்
மனமெனும்
சுவர்க்க சிறைக்குள்
ஆயுள் கைதியாகி விடுகிறேன். 




உன்னை நேசித்த பின்புதான்
உலகை நேசிக்க தொடங்கினேன்
உன்னோடு பேசிய பின்புதான்
மனதோடு உறவாட
மிதமாய் கற்றுக்கொண்டேன்
உன்னோடு பழகிய பின்புதான்
காதலை உணர்ந்து கொண்டேன் - உன்
மனதில் விழுந்த பின்புதான் 

காதலின் ஆழமறிந்தேன் - இன்று 
உன்னை பிரிந்திருக்கிற போதுதான் 
காத்திருப்பின் சுகத்தையும் 
காதலின் வலியையும் 
அனுபவிக்கிறேன்...! 

ஞானம் 
கலை இலக்கிய சஞ்சிகை 
ஜூலை 2011 
பக்கம் 17 
இதழ் - 134 

கவிதா 
கொட்டகலை 

எண்ணத்தில் ஒரு துளி 
https://skaveetha.blogspot.com/2019/02/ennaththil-oru-thuli.html 
#கவிதை #காதல் #தனிமை #வலி #காத்திருப்பு #பிரிவு #நினைவுகள் #மனம் #நரகம் #சுவர்க்கம் #எழுத்து #ஆனந்தம் #மகிழ்ச்சி 

Tuesday, 1 January 2019

கோபம் வேண்டாம் நண்பியே!

உன் மௌனப் பார்வையில் 
என் காகித ஏடுகள் 
கவி வரிகளால் 
நிரம்பியது - ஒரு 
வார்த்தை பேசு பெண்ணே! 



இந்த இதயம் நிரம்பட்டும் 
நள்ளிரவில் என் விழிகள் 
உறங்கட்டும் 
பலரோடு நான் 
ஒத்துத்தான் போகிறேன் 
உன் நினைவால் 
இரவோடு நான் 
செத்துப் போகிறேன் 

கவிதைச்சமர் 
உதய சூரியன் 
வார இதழ் 
பக்கம் - 14 
எஸ். கவீதா 
(செ. கவீதா) 
கொட்டகலை 

Saturday, 17 November 2018

சுகமான சுமைகள்

என்னை - உன் 
மனதுள் சுமக்கும் போது 
உன் மனதுக்கு 
வலிக்குமோ என - என் 
இதயம் கண்ணீர் 
சிந்தியது 



அதனால்தானோ என்னவோ 
உன்னை என் 
உயிரில் சுமக்கிறேன் 
இப்போது 
அனைத்து 
சுகமான சுமைகளும் 
எனக்கு மட்டுமல்லவா...? 

செ. கவீதா 
கொட்டகலை 
உதய சூரியன் 
வார இதழ் 
05-07-2012 
பக்கம் - 06 
கவிதைச்சமர் 

Saturday, 20 October 2018

வேண்டாம்

உன்னை 
பின்தொடர்வதெல்லாம் - நீ 
சுவாசிக்கும் காற்றை 
சுவாசிப்பதற்கே! 
தயவுசெய்து 
திரும்பிப் பார்த்திடாதே, 
சூறாவளியைத் 
தாங்கும் சக்தி 
சத்தியமாய் - என் 
இதயத்துக்கு கிடையாது. 



செ. கவீதா, 
கொட்டகலை. 

உதய சூரியன் 
வார இதழ் 
28-06-2012 
பக்கம் - 06. 

Tuesday, 16 October 2018

காத்திருப்பின் ரணம்

காத்திருப்பு என்பது 
சுகமானது - ஆனால் 
உனக்காக நான் 
காத்திருக்க வேண்டுமானால் 
என் வாழ்வின் 
எல்லை வரையல்லவா 
காத்திருக்க வேண்டும்...? 



இக்கவிதை இலங்கையின் மலையக வார இதழான 'உதய சூரியன்' வார இதழில் 25-அக்டோபர்-2011இல் வெளியானது. 

செ. கவீதா, கொட்டகலை. 

Thursday, 30 August 2018

மரணித்து போனவளே | காணொளி கவிதை






மனிதர்கள் அழியலாம். அவர்களின் எண்ணங்கள் மறைவதில்லை. கவிஞர் கவீதா இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும் அவரது கவிதைகள் இன்றும் நம்மிடையே உலவிக் கொண்டு தானிருக்கின்றன.

நமது 'சிகரம்' இணையத்தளம் https://www.sigaram.info/ மற்றும் https://www.sigaram.co/ ஆகிய முகவரிகளில் இயங்கி வருகிறது. 'சிகரம்' இணையத்தள வலையமைப்பின் ஊடாக 'கவீதாவின் பக்கங்கள்' வலைத்தளம் இயக்கப்பட்டு வருகிறது.

கவிஞர் கவீதாவின் கவிதைகளில் ஒரு சில கவிதைகள் மட்டுமே இதுவரை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை காணொளி வடிவில் வழங்கும் முயற்சியை தற்போது மேற்கொண்டு வருகிறோம். அதன் முதற்படியாக இக்கவிதைக் காணொளியை உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.

எமது சிகரம் யூடியூப் அலைவரிசையில் இணைந்து எதிர்கால முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.





கவிஞர் கவீதாவின் ஆவணப்படுத்தப்படாத எத்தனையோ கவிதைகள் இன்னும் உள்ளன. அவற்றை தேடியெடுத்து எதிர்காலத்தில் வலைத்தளம் ஊடாக வெளியிட சிகரம் இணைய வலையமைப்பு தயாராகவுள்ளது.

#கவிதை #தமிழ் #கவீதா #மலையகம் #காதல் #அன்பு #காணொளி #சோகம் #மரணம் #நிம்மதி #உணர்வுகள் #புரிதல் #வாழ்க்கை #சிகரம் 

Tuesday, 11 October 2016

வலைப்பதிவர் கவீதா காலமானார்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். பாடசாலைக் காலத்தின் பின் இலங்கையின் பத்திரிகைகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது கவிதை ஆர்வத்தைக் கண்ட நான் அவரது கவிதைகளை உலகறியச் செய்ய எண்ணி 'கவீதாவின் பக்கங்கள்' என்னும் வலைப்பதிவை உருவாக்கி அவரது கவிதைகளை பிரசுரித்து வந்தேன். அவரிடம் கணினி வசதியில்லாததன் காரணமாக நானே தொடர்ந்து அந்த வலைப்பதிவை நடத்தி வந்தேன். என்றாலும் என்னால் இவ்வலைப்பதிவை சரிவர தொடர்ந்து நடத்திட இயலவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக அவருடன் உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை.

இன்று (2016.10.11) பள்ளித் தோழி ஒருவரிடம் நீண்ட நாட்களின் பின் உரையாடிக் கொண்டிருந்த போது 2016.07.05 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக , அதாவது 2016.06.15 ஆம் திகதியே அவருக்குத் திருமணம் இடம்பெற்றுள்ளது. அவசர கதியில் உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கடந்த வருடம் அவர் கவிதை நூல் ஒன்றை வெளியிடும் நோக்கத்துடன் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பணமும் சேர்த்து வருவதாகவும் என்னிடம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தக் குறிஞ்சிப் பூ இன்று நம் மத்தியில் இல்லை. என்றாலும் என்னால் இயலுமானால் அவரது கவிதைகளை அவரது பெற்றோரிடம் கேட்டுப் பார்த்து குறைந்தபட்சம் வலைத்தளத்திலேனும் வெளியிட முயற்சி செய்கிறேன். 



அவரது தற்கொலை மரணம் தொடர்பில் இலங்கையின் செய்தி இணையத்தளமான 'கருடன் நியூஸ்' பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

# திருமணம் நடந்து 21 நாட்களில் இளம் பெண் தற்கொலை. ராகலையில் சம்பவம்!

திருமணம் முடித்து 21 நாட்களே ஆன நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவமொன்று ராகலை கோனபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ராகலை கோனபிட்டியை சேர்ந்த செல்வராஜ் பிரியதர்ஷினி என்ற 28 வயதான இளம் பெண்ணொருவரே இவ்வாறு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது கணவன் வேலையில் இருந்து வீடு திரும்பியபோது அவரது புது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். #

நமது காவல்துறை விசாரணையில் இதுவரை எதையும் சாதித்து விடவில்லை. இனியும் சாதிக்கப் போவதில்லை. அவரது மரணத்தில் ஏதேனும் மர்மங்கள் இருந்தால் அதனை காலம் நிச்சயம் வெளிக்கொண்டுவரும். ஆனாலும் காலத்தால் நமது தோழி கவிஞர் கவீதாவை திருப்பிக் கொடுக்க முடியாது என்பதை நினைக்கும் போது இதயம் கனக்கிறது. 

தோழியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்!

Tuesday, 29 July 2014

கடிகாரம்


Image credits to its owner only.


மணி முள்ளாய் நான் 
செக்கன் முள்ளாய் நீ 
எனை காண வருகிறாய் என 
மெதுவாக நகர 
என்னைத் தாண்டி 
ஏன் நீ விரைகிறாய்?

Wednesday, 23 July 2014

மூடாத செவிகள்

இத்தனை பெரிய 
பட்டாசு 
சத்தத்திலும் 
செவி மூடாத
என் சிநேகிதனை 
தாமதமாகித்தான் 
நான் 
அறிந்து கொண்டேன் ,
கேட்காமல் போனது 
அவன் காதுகள் 
அல்ல ,
யுத்தத்தில் 
மறுத்துப் போனது 
அவன் இதயம் 
தான் என்று !

Friday, 4 July 2014

பிரிவு



Image credits to its owner only. 


கனாக் கண்டேனடி 
உனைப்போல் 
ஒரு 
நண்பியும் 
நட்பும் கிடைக்குமா என்று 
பரவசமானேனடி
நீ 
கிடைத்துவிட்டாய் என்று 
இன்றோ 
பைத்தியமாகிறேனடி 
புரியாமல் 
நீ எனை 
பிரிந்தாய் என்று.

Saturday, 21 June 2014

தவறிய அழைப்பு

தருவாயா ஒரு முறை 
என் கோபமெனும் தவறால் 
தவறிப்போன 
நம் அன்போடு சேர்த்து 
ஒரே ஒரு 
தவறிய அழைப்பை?
 

Tuesday, 17 June 2014

நான்

 
என் அன்னை கருவறையில் 
கவிதையொன்று 
சுமந்தாச்சு 
அதுவே இன்று 
'கவீதா'
என்று ஆயாச்சு 
கருவறையில் நான் 
விட்ட முதல் மூச்சு 
கவிதான் 
முட்டிமோதி வெளியில் வந்து 
தத்தித் தாவி 
நடக்கையிலே 
ஆண்டவனும் 
எனக்களித்த முதல் 
பரிசும் அது தான் 
உயிரோடு கலந்தாச்சு 
அது எந்தன் 
உறவாச்சு 
உடம்பு தீயில் வெந்தாலும் 
உயிரும் கொஞ்சம் 
நொந்தாலும் 
மறுஜென்மம் நான் எடுப்பேன் 
அழியாத என் 
கவியாத்மா 
மறுபடியும் 
என்னை உருவாக்கும் 
மொத்தமாக......

Thursday, 5 June 2014

காத்திருப்பு

 

என் இதயம் 
அழுவது
காத்திருந்து கால்கள்
வலிப்பதனால் அல்ல...
முகம்பாராது 
காத்திருக்கும் 
நம் 
நட்பு பொய்த்துவிடுமோ 
என்றுதான்...

Friday, 30 May 2014

இடம் வேண்டும் !

செத்தும் பார்ப்பேன்
நான் 

செத்தும் பார்ப்பேன் 
நான் - என் 
மரணத்தின் 
பின்னாவது - உன் 
மனமெனும் 
சுவர்க்கத்தில் எனக்கோர் 
இடமிருப்பது 
உறுதியானால்..


Tuesday, 27 May 2014

நேசம்

 

கவிதை எழுதினேன்
வரவில்லை,
 கண்ணீர்தான் வந்தது;
எனக்கல்ல,
என் பேனைக்கு.

நம் பிரிவின்  வலி
என் பேனைக்குக்  கூட
பொறுக்கவில்லை...

நீ மட்டும் எப்படி?

நிஜமாகவே 
நீ நேசித்தாயா?

Sunday, 2 December 2012

காரணம் தெரியுமா?



என் கண்ணாடியை 
நொடிக்கொரு தரம் 
பார்த்துக் கொள்கிறேன்
என்னையல்ல - என் 
கண்களுக்குள் 
வாழும் உன்னை.

Sunday, 25 November 2012

நான் பார்த்த முதல் கவிதை



கன்னிக் கவிதையில்
தடம் பதிக்கும் அந்நேரம்
கடவுள் துதி சொல்லவில்லை
உன் புகழ்
தொடங்காமல்
என் கவியுமில்லை
கவிதையா....?
என்னவென சிந்தித்தேன்
பக்கத்தில் வந்தமர்ந்தாய்
அம்மா என்றேன்
ஆஹா...... முதல் கவியும்
உருவாச்சு கவியொன்று
கேட்டாங்கம்மா
நானும் சொன்னேன்
போங்க சும்மா...
பிறகு நான் சிந்திச்சேன்
முதல் கவிதை
உனை நானும்
சந்திச்சேன்
நான் பார்த்த முதல் கவிதை
அது தான் என் கவி விதை
வளர்ந்து சின்ன மரமாச்சு
உன்னை விட ஒன்றுமில்லை
என்றும் இவள்
உன் பிள்ளை

இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான 'உதயசூரியன்' இதழில் 22-நவம்பர்-2012 திகதியன்று வெளியானது. 

செ. கவீதா, கொட்டகலை. 

Sunday, 12 August 2012

இடம் தருவாயா?



செத்தே போவேன்
ஒரு முறை.........
செத்தே போவேன்
ஒரு முறை - என்
மரணத்தின் பின்
உன்
மனமெனும்
சுவர்க்கத்தில்
எனக்கோர்
இடம் இருப்பது
உறுதியானால்.............


Tuesday, 3 July 2012

வருவாயா ஒரு முறை...?


பலரோடு நான் 
ஒத்துத்தான் போகிறேன்,
உன் நினைவால் 
தனிமையில் நான்
செத்துப் போகிறேன். 

Sunday, 1 July 2012

மரணித்து போனவளே...



உனக்காக 
எது வேண்டுமென்றாலும் 
தருவேன் என்றேன் - இன்றோ 
உன் கல்லறை முன் 
கதறுகிறேன் - என் 
உயிரைத் தருகிறேனடி 
எடுத்துக் கொள். 
எனக்காக உன் 
கல்லறையை தந்துவிடு.
மரணித்து போனவளே,
நான் உயிர் தருகிறேன் 
மரணத்தை மட்டும் தா.

Share it

Ads

Popular Posts